பாக்கி
போலீஸ் ஸ்டேஷன் எதிர் சந்தில் நுழைய வேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனால் மறந்து விட்டது. சந்தில் திரும்பி நான்கு அடி வைப்பதற்குள் சுந்தரி.
நான் சுந்தரியைப் பார்க்காதது போலத் தாண்டிச் சென்றேன். ஆனால் அவள் உரத்த குரலில், 'என்னாங்க என்னாஙக ' ' என்று கூப்பிட்டாள். சந்தில் போய்க் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் என்னை பார்த்தார்கள். நான் நின்றேன்.
சுந்தரி அருகில் வந்து, 'ரெண்டு நிமிஷம் வீட்டுப் பக்கம் வந்துட்டுப் போங்க ', என்றாள். நான் அவளைப் பின் தொடர்ந்தேன்.
சந்தினுள் சந்தாக மூன்று முறை திரும்பி அவள் வீட்டை அடைந்தோம். அங்கிருந்த வீடுகள் சுவர்கள் கொண்டிருந்தன என்பதைத்தவிர சேரிப் பகுதியிலிருந்து அதிகம் மாறுபட்டவை அல்ல. சுந்தரி இருந்த வாசல் கதவைத் திறந்தவுடனேயே இருந்த ஆளோடியின் நடுவில் பெரிய சாக்கடை. இருபுறங்களிலும் இருந்த அறைகளில் ஏராளமான குடும்பங்கள் அந்த வீட்டிலும் மாடி இருந்தது. அங்கு ஒரே ஒரு தனி அறை. அது சுந்தரியுடையது.
பகல் நேரத்தில் அங்கு வெளிச்சத்துக்குக் குறைவில்லை. 'எங்கே சுவர்க் கடியாரம் ? ' என்று கேட்டேன். அது நான் வாங்கியது.
'மார்வாடிக் கடைக்குப் போயிருக்கு, ' என்றாள்.
'இருபது ரூபா கூடக் கிடைக்காதே ? '
'அதுகூடக் கையிலே இல்லாத போது என்ன செய்யறது ? '
'ஏன், பிரபாகர் இல்லையா ? '
'அவரைப் பத்தி விசாரிக்கத்தான் உங்களைக் கூப்பிட்டேன். '
'ஏன், என்னாச்சு ? '
'தெரியலைங்க. அவரு இங்கே வந்து மூணு மாசம் ஆறது. '
என் மனத்தில் எங்கோ ஓர் மூலையில் 'நல்லா வேணும் உனக்கு, ' என்று சொல்லத் தோன்றியது.
'ஓகோ, ' என்றேன்.
திடாரென்று சுந்தரி விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள்.
நான் சுந்தரி அழுது பார்த்தது கிடையாது. உண்மையில் பிறரைக் கதறக் கதற அடிப்பதில்தான் அவள் பெயர் பெற்றவள். ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு என் வீட்டு முன்னால் ஊரைக் கூட்டி எப்படியெல்லாம் மானத்தை வாங்கினாள் ? யாரோ ஒருவர் ஒரு போலீஸ்காரனையும் அழைத்து வந்துவிட அதன் பிறகு போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை. தற்கால நாகரீகத்தில் ஆண் ஒருவனுக்குக் கெளரவம் என்று ஒன்று இருப்பதை துளிப் பாக்கி இல்லாமல் சுந்தரி அங்கு குதறிப் போட்டு எடுத்தாள். இவ்வளவு ஆன பிறகு ஒருவன் உடனே நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாவான். அல்லது தூக்குப் போட்டுக் கொண்டு உயிரை விடுவான். நானும் அதெல்லாம் யோசித்தேன். ஆனால் அதெல்லாவற்றையும் விட இன்னும் தீவிரமான முடிவு எடுத்தேன். சுந்தரி கழுத்தில் தாலி கட்டுகிறேன் என்று சொன்னேன். அப்படிச் செய்வதற்கு வசதிப்படவில்லை. மூண்று வருடங்கள் அவளுடன் இருந்தேன். எனக்கு வந்த சம்பாத்தியம் அனைத்தையும் அவளிடம் கொடுத்து அவள் பொங்கி போடும் சாதத்தை விழுங்கினேன். காதலுக்காகவும் ஒரு பெண்ணுக்காகவும் எல்லாவற்றையும் தியாகம் புரிபவன் அல்லது நல்லது கெட்டது சுரணையற்ற அறிவு மதித்தவன் என்றெல்லாம் நான் என்னைப் பற்றி நினைத்துச் சொல்லவில்லை. நடுநடுவில் சந்தோஷமாகக் கூட இருந்தேன். அப்போது பிரபாகர் நுழைந்தான். பெரிய கூச்சல் குழப்பம் இல்லாமல் ஆறு மாத காலத்தில் அவன் சுந்தரியின் அறையில் குடியேற மீண்டும் நான் என் உறவுகாரர்கள் மத்தியில் என்னைப் பொருத்திக் கொண்டேன். எனக்கு இப்போது இரண்டாவது பெண் பிறந்து நான்கு வாரங்கள் ஆகின்றன.
சுந்தரியின் அழுகை தானாக ஓய்ந்தது. நான் எழுந்தேன். அவள் கண்ணையும் மூக்கையும் துடைத்துக் கொண்டு சற்றுத் திகிலுடன், 'எங்கே போறீங்க ? ' என்று கேட்டாள்.
'ஏன், என்ன ? '
'ஒண்ணுமே சொல்லாமலேயே போறீங்களே ? '
நான் அறையைச் சுற்றிப் பார்த்தேன். முன்பிருந்த பாத்திரங்களில் பாதிதான் பாக்கியிருந்தது. பக்கெட் மாறியிருந்தது. சுருணைத் துணியாகத் தொங்கியது என்னுடைய ஒரு ஜிப்பா. மிகவும் உறுதியான துணியாக இருக்க வேண்டும்.
'டா கொண்டு வரச் சொல்லட்டுமா ? ' என்று கேட்டாள்.
'ஏன், இங்கே கொதிக்க வைக்க முடியாதா ? '
'டாத் தூள், பாலு, சர்க்கரை எல்லாமே கடன் வாங்கணும். அதுக்கு ஒரேயடியா டாயையே கடனா வாங்கிடலாம். '
'இவ்வளவு சாமர்த்தியக்காரியாக இருந்து கோட்டை விட்டுட்டியே ? எனக்கு பிரபாகர் பத்தி ரொம்ப தெரியாது. கிரவுன் டாக்கீஸ் பக்கத்து சந்துன்னு எப்பவோ சொன்னான். நீ போய்ப் பாத்தியா ? '
'போனேன். அங்கே அவன் அம்மாதான் இருக்கா. அவ பெரிய பஜாரி. அவ பையன் பணமெல்லாம் பிடுங்கிட்டேன்னு கத்தி அவர்களம் செய்து போலீசெல்லாம் வரவழைச்சிட்டா. ஆனா அந்தப் படுபாவி எங்கே போனான்னே தெரியலே. '
'நான் மட்டும் என்ன பண்ண முடியும் ? எனக்கு அந்த ஆளை அதிகம் தெரியாது. '
'உங்க சீஃப் மேக்கப்மேனுக்கு உறவுன்னு முன்னே சொன்னீங்களே ? '
'என்ன, என்ன ? '
'நரசிம்மராவ் சாருக்கு உறவுன்னு நீங்கதான் சொன்னீங்க. '
'நானா சொன்னேன் ? '
'ஆமாங்க. '
எனக்கும் அது நிழல் போல நினைவில் தோன்றியது. நரசிம்மராவ் ஒரு முறை அவன் ஊருக்கு போய் ஒரு பெண்ணை அழைத்து வந்தான். சில நாட்களுக்கு பிறகு தான் தெரிந்தது, அவள் ஏற்கேனவே இன்னொருத்தருடைய மனைவி என்று. இருவர் போக்கிலும் உள்ள ஒற்றுமைக்காகத்தான் நரசிம்மராவுடைய தம்பி பிரபாகர் என்று நான் கூறியிருக்க வேண்டும்.
'நாலு வருஷம் அவன்கூட வாழ்ந்திருக்கே, அவன் மனுஷாளுங்க யாரு என்னன்னு தெரிஞ்சு வச்சுக்க கூடாதா ? '
நான் முற்றிலும் தளர்ந்திருக்கும் நேரமாகப் பார்த்து அவள்தான் என்னைப் பற்றி எவ்வளவு தகவல்கள் தெரிந்து வைத்திருந்தாள் ' இதெல்லாம் அவள் என் வீட்டு முன்னால் அமர்க்களம் செய்த போதும் பின்னர் போலீஸ் ஸ்டேஷனிலும் விசேஷமாக பயன்பட்டன. நான் எப்படி நாக்கைப் பிடுங்கிச் சாகவில்லை என்று எனக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது.
பிரபாகர் அவளை வைத்து காப்பாற்றவில்லை என்பதோடு விஷயம் முடியவில்லை. அவளிடமிருந்த ஓரிரண்டு தங்க நகைகள், வெள்ளிப் பாத்திரம், பட்டுப் புடவை எல்லாவற்றையும் காசாக்கிக் கொண்டு செலவழித்திருக்கிறான். அவன் குடிக்க மாட்டான். சுந்தரி என்னை அவளுடைய வாழ்க்கையிலிருந்து விலக்கிவிட்டு அவனைத் தேர்ந்தெடுத்ததற்கு அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்க வேண்டும். முழுக்க முழுக்கச் சுயநினைவுடனேயே அவளைச் சுரண்டியிருக்கிறான்.
நான் மறுபடியும் எழுந்து நின்றேன். சாட்டை போன்ற நாக்கு ஒன்றை நம்பியே இவ்வளவு நாட்கள் இவ்வளவு பெரிய நகரில் காலம் தள்ளியவள் இப்போது வழுவிழந்து துவண்டு போய் நிற்கிறாள். நான் அவளோடு வாழ்க்கை நடத்திய போதும் அவளுடைய குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் என்று யாரும் வந்தது கிடையாது. அவளுடைய ஊர்க்காரர்கள் யாராவது அவளை எப்படி எப்படியோ விசாரித்துக் கொண்டு வந்து சேருவார்கள். ஒருவேளை அல்லது இருவேளைச் சாப்பாட்டோடு சரி, சுந்தரி அவர்களைக் கிளப்பி விடுவாள். பிரபாகரோடு இருந்த போது, ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்று நம்புவதற்கில்லை. நான் என்னிடம் இருந்ததெல்லாம் கப்பம் போல் அவள் காலடியில் சேர்த்திருக்க, அவன் மட்டும் அவளிடமே சூறையாடியிருக்கிறான். கில்லாடி தான். அவனை அதிகம் பழக்கம் செய்து கொள்ள வாய்ப்பு ஏற்படவில்லை.
'சுந்தரி, இப்போ முன்னைப் போல எதுவுமே இல்லை. நானே முன்னைப் போல இல்லை. அப்படி இருக்கவும் முடியாது. நான் கட்டியிருக்கிறவள் கிட்டே உன் ஆர்ப்பாட்டம், அட்டகாசம் ஒண்ணும் பலிக்காது. '
'அப்படியெல்லாம் நினைக்கலேங்க. உங்க வீட்டுப் பக்கமே நான் வரவே இல்லியே. அதுலேயிருந்து தெரியலீங்களா என் மனசு ? '
'அவனுக்கு வந்த கடுதாசு ஏதாவது இருக்கா ? அவன் வேலை பார்த்த இடத்திலேர்ந்து கொடுத்த சம்பளக் கவர் பட்டியல் ஏதாவது இருக்குமே ? '
'ஒரு தகரப் பெட்டியிலே மூணு நாலு கிழிஞ்ச துணிதாங்க இருக்கு. ஒரு போட்டோவும், சாமிபடமும் இருக்கு. '
'அது இரண்டையும் கொண்டா. '
அந்தப் புகைப்படத்தைக் கொண்டு எதுவும் ஊகிக்க முடியவில்லை. படத்திலிருப்பது ஆணா பெண்ணா என்று கூடத் தெரியாதபடி வெளுத்துப் போயிருந்தது. சாமி படம் நரசிம்மருடையது. அளவுக்கு மீறி வாயைத் திறந்தபடி பிரகலாத ரட்சகன் காட்சியளித்தார். பானக நரசிம்மன் என்று பெயர். குண்டூர் அருகே மங்களகிரி என்ற ஆந்திரப் பிரதேச மலை மீதிருக்கும் அந்த நரசிம்ம விக்கிரகத்தின் வாயில் எந்த அளவுப் பாத்திரத்திலிருந்தும் பானகம் தயாரித்து வாயில் ஊற்றினாலும் பாதிப் பாத்திரம் முடியும் போது வாய் நிரம்பிவிடும். பிரபாகர் விஜயவாடா – குண்டூர் பக்கத்து ஆளாக இருக்க வேண்டும்.
'சரி, விசாரிச்சுப் பார்க்கிறேன், ' என்று சொல்லி விட்டுத் திரும்பினேன்.
'ஒரு நிமிஷங்க, ' என்றாள்.
'நீ ரொம்ப 'ங்க ' போடறது எனக்கு என்னவோ போல் இருக்கு. '
'அது இல்லீங்க… '
'சரி, சீக்கிரம் சொல்லு. '
'நிலைமை ரொம்ப மோசம். சீக்கிரமா அந்த மனுஷனைப் பார்த்து என்ன ஏதுன்னு கேட்க முடியலேன்னா, நான் மறுபடியும் ஸ்டூடியோ பக்கம்தான் போக வேண்டியிருக்கும். '
நான் கொடூரமாக ஏதாவது பேசி விடுவேனோ என்று அவள் கண்களில் தெரிந்த பயம் எனக்கு அளவிட முடியாத வேதனை அளித்தது. திரும்பத் திரும்ப அந்த போலீஸ் ஸ்டேஷன் தோற்றம் கண் முன் வந்தது.
என் சட்டைப் பையிலிருந்து ஒரு பழைய கவரை எடுத்தேன். நான் பணத்தைக் காகிதக் கவர்களில் வைத்துக் கொள்வதுதான் வழக்கம். சுந்தரி அசையாமல் நின்று கொண்டிருந்தாள்.
முப்பது ரூபாய் இருந்தது. அவளிடம் நீட்டினேன். வாங்கிக் கொண்டாள்.
'இதை இப்போ வச்சுக்க. நான் அப்பப்போ வந்து போறேன். '
நான் இதை எந்தப் பொருளில் சொன்னேன் என்று எனக்கே தெரியவில்லை. அவளுக்கும் தெரியவில்லை என்று அவள் முகம் காட்டியது.
அன்று மாலை நான் மீண்டும் அவள் அறைக்குப் போனபோது அங்கு பேச்சுக் குரல் கேட்டது. பிரபாகர் திரும்பி வந்துவிட்டான். நான் பாதி மாடிப்படியிலிருந்து இறங்கி வந்து விட்டேன். எனக்கும் சுந்தரிக்கும் உறவு பாக்கி இருந்ததோ இல்லையோ, பிரபாகருக்கு நான் எந்த ஜென்மத்திலோ கடன் பட்டிருக்க வேண்டும். சுந்தரி அறையிலிருந்து சமையல் வாசனை தடபுடலாக வந்து கொண்டிருந்தது.
VERY BORING………………………….
It’s very good situation story
sooooooooo baddddddddd
This story is confussed
time is waste
Climax sema……..
Ok. Nice
As usual very good story from Ashokamithran. His view will be different always.
nice story, but very short
waste of my time
waste
unga story nice………but yathavathu oru ideavoda next story eluthalam
story u send my email id
Not bad…
ok ok
i dont like story
செம மொக்கையான கதை.